என்னோடும் பேசு சாமிநாதா

ஈசனோடு பேசியது போதுமே
என்னோடும் பேசுசாமி நாதனே
ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்
ஐயாஉன் திருவடியை நாடினேன்


கண்சீறும் பொறியூறி பிறந்தவா
கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவா
தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே
சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா

கடலோரம் நிற்பவனே சண்முகா
கடல் நீரால் உடல் அரிக்கும் அல்லவா
நடமாடும் மயிலேறி இங்குவா
நல்ல மனக் கோயிலுண்டு தங்கவா

குன்றத்திலே கல்யாணம் ஆனதால்
குவலயத்தை நீமறத்தால் நியாயமா
குன்றத்தையும் விட்டிறங்கி ஓடிவா
கொஞ்சு தமிழ் இசைகேட்டு ஆடிவா

பன்னிரண்டு கண்களாடுந் தெய்வமே
என்னை மட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்

ஒன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான் வாழ வரங்கொடு.