காவடிக் கதை கேளு


காவடிக் கதை கேளு
காவடிக் கதை கேளு - குமரனின்
காவடிக் கதை கேளு
காடு மலை கடக்கும் கந்தனின்
காவடிக் கதை கேளு


சுப்பிரமணியவன்- போரினிலே
சூரனை வென்றானாம்
சூர தோழன் இடும்பன் - கந்தனின்
பக்தனும் ஆனானாம்
மாமுனி அகத்தியன் - இடும்பனை
நியமனம் செய்தாரே
சக்தி சிவ கிரியை - பொதிகையில்
சேர்த்திடச் சொன்னாரே

காவுதடி சுமந்தான் - இடும்பன்
காவுதடி சுமந்தான்
சக்தி சிவ கிரியைத் - தடியிலே
கட்டிக்கொண்டு சுமந்தான்
"கா" என்ற சொல்லின் பொருள்
தமிழினில் "மரம் " என்பதாகுமே
"காவுதடி" மருவி "காவடி" -
என்றான கதை கேளு

காவடி தூக்கிக்கொண்டே - இடும்பன்
பழனி மலை சேர்ந்தான்
சேர்ந்த பொழுதினிலே - மலையின் சுமை
சோர்வினைத் தந்ததுவாம்
சோர்வு கொண்ட இடும்பன் - இளைப்பாற
எண்ணமும் கொண்டானாம்
காவடிச் சுமைதனை பழனியிலே
இறக்கி வைத்தானாம்

ஓய்வு பெற்றவுடனே - காவடியைத்
தூக்க முயன்றானே
காவடியதன் சுமை - கூடிவிட்ட
உண்மைக் கதை கேளு
பாலன் ஒருவன் நின்றான் -மலையின்மேல்
பாலன் ஒருவன் நின்றான்
குன்றினில் நின்றுகொண்டு - இடும்பனைக்
கண்டு நகைத்தானே

கோபம் கொண்ட இடும்பன் - பாலன்மேல்
பாய முற்பட்டானே
பாயும் பொழுதினிலே - தவறி
மலையின்கீழ் வீழ்ந்தானே
மீண்டும் எழுந்தானே - இடும்பன்
மீண்டும் எழுந்தானே
வெற்றி வடிவேலன் - தெய்வத்திரு
காட்சியைக் கண்டானே

கோலமயில் குமரன் - இடும்பனை
ஆட்கொண்டு விட்டானே
காவடி தூக்கிவரும் பக்தர்களை
ஆட்கொண்டுவிடுவானே
கோலமயில் குமரன் - நம்மையெல்லாம்
ஆட்கொண்டு விட்டானே
காவடி தூக்கிவரும் பக்தர்களை
ஆட்கொண்டுவிடுவானே

நித்யா அருணாச்சலம்