சிங்கார வேலு!

வேல் வேல்

அலங்காரம் செய்திட்ட மயிலு -நம்ம
முருகனின் கையிலே சிங்கார வேலு!
வேலுக்கு இடுவோமே பூசை - பாதை
மீதினில் வந்திடும் பக்தியெனும் ஆசை!
மணியோசை கேட்போமே மலையில் - அங்கே
மலையாண்டி நிற்பானே அலங்கார நிலையில்!
வேல்வழியே பால்வழியும் காட்சி - நம்ம
முருகனவன் வினைதீர்க்க ஓடிவரும் மாட்சி!
சரவணனின் ஆறுமுகத் தோற்றம் - நல்ல
சம்காரம் செய்தோனின் புனிதத்தின் மாற்றம்!
தந்தைக்கு வேதத்தைச் சொன்னான்_வள்ளி
தனக்காக மரமாகிச் சோலையிலே நின்றான்!
ஒருமுகத்தைப் பழநியிலே பார்ப்போம்_அந்தத்
திருமுகத்தின் பூமலரின் வேதனையைத் தீர்ப்போம்!
தினையூட்டிப் பசி தீர்த்தாள் வள்ளி - முருகன்
தினந்தோறும் பசிதீர்க்க வருவாளே துள்ளி
அடிவாழைக் கன்றாகி வாழ்வோம் - நம்ம
குடிவாழக் குமரனின் பாதத்தைச் சார்வோம்!