சிங்கைமுருகா வருவாய் இதுசமயம்

சிங்கைநகர் வாழ்கின்ற ஸ்ரீ தெண்டாயுதபாணியின்
பெருமைதனை இவ்வுலகில் சந்தத்தோடு நான்பாட
முழுமுதற் கடவுளாம் முக்கண்னனார் புத்திரனாம்
லயன்சித்தி விநாயகன் காப்பாமே!

அன்புமனம் கொண்டவனே ஆனைமுகன் சோதரனே
இன்னல்கள் களைகின்ற ஈடில்லா பெருமானே!
உளமாறப் பாடுகின்றேன் ஊரெல்லாம் மெச்சிடவே
எங்குலநாயகனே வருவாய் இதுசமயம்!

காவடிகள் ஏற்பவனே கருணையுள்ளம் கொண்டவனே
கடல்கடந்து வந்தோரை காலமெல்லாம் காப்பவனே
கவிபாடி மகிழ்கின்றேன் கவலையெல்லாம் தீர்த்திடவே
கந்தவடிவேலவனே வருவாய் இதுசமயம்!

பார்வதியின் பாலகனே பரமசிவன் புத்திரனே
பாவெமல்லாம் தீர்கின்ற பண்னிருகை வேலவனே
பண்னிசைத்துப் பாடுகின்றேன் பாலனெனக்கு அருளிடவே
பாராளும்நாயகனே வருவாய் இதுசமயம்!

தங்கத்தேரில் வருபவனே தாயான மன்னவனே
தரணியெல்லாம் காக்கின்ற தென்பழனி ஆண்டவனே
தாளமிட்டுஅழைக்கின்றேன் தாழ்வகற்றிகாத்திடவே
தாமதமேதுமின்றி வருவாய் இதுசமயம்!

வேலுருவாய் இருப்பவனே வேதனைகள் தீர்ப்பவனே
வேண்டும் வரம்தருகின்ற வள்ளல்குணம்படைத்தவனே
வேகத்துடன்கவியுரைத்தேன் விழிநீரை துடைப்பதற்கே
வண்ணமயிலேறி வருவாய் இதுசமயம்!

சிங்கையில் வாழ்பவனே சிங்கார வேலவனே
சிக்கலை தீர்த்துவிடும் சிவன்மகனே சண்முகனே
சந்தத்திலே உனைவைத்தேன் சங்கடங்கள் நீக்கிடவே
சிங்கைமுருகா வருவாய் இதுசமயம்!

அழகு திருநாவிற்கரசு.