செங்கீரை முன்னோடிக் கருப்பர்

அரோகரா

செங்கீரை என்கின்ற சிங்கார சிற்றூரில்
சீர் கொண்டிலங்கும் தேவா!
எங்குலம் காக்கவும் இன்னல்கள் தீர்க்கவும்
வெண்புரவி ஏறிவா! வா!

ஆடுடன் சேவலும் பொங்கலும் வைத்துமே
ஆண்டாண்டு பூசை வைப்போம்
பீடுடன் தரணியில் பெருவாழ்வு பெற்றிட
பேரருளை நீயும் தா! தா!

கையிலொரு அரிவாளும் கனத்த பெருமீசையும்
கண்டதும் நடுங்க வைக்கும்!
பொய்மையும் தீமையும் போயொழிந்தனுதினம்
வாய்மையே முன்பு நிற்கும்!

முன் ஓடிவரும்வினை தீர்ப்பதால் தான் உன்னை
முன்னோடி கருப்பனென்றார்!
முன்னோடி கருப்பனே! முன் வந்து பணிகிறோம்!
உன்தருள் தந்து காப்பாய்!

பனந்தமுடைக் கருப்பர்

ஆறாவயல் விட்டு இரண்டுகல் தொலைவிலே
சீராக வீற்றிருக்கும்,
அன்பான பனந்தமுடைக் கருப்பண்ணன் அருளையே
அன்றாடம் நாடி நிற்போம்.

மாறாத செல்வவளம் மங்காத நல்லறிவு
மழைபோல பொழிந்து வருவான்!
மேலான அவன் நாமம் மெய்யாகத் துதிப் போர்க்கு
மேன்மை போர் கோடி தருவான்!

கூரான வாளோடு தோதான அரிவாளும்
கொண்டவன் பனந்த முடையான்,
குழந்தைகள் பெரியவர் சகலரின் நலத்தையும்
காப்பவன் பனந்த முடையான்

தீராத வினைகளை ஓரிரு கனங்களில் தொலைத்திடும்
அந்தத் தெய்வம்
அவனைத் தொழுகின்ற பேருக்குத் தெவிட்டாத
இன்பங்கள் தந்திடுவான் இல்லை ஐயம்!

-மீ. வயிரவன், தேவகோட்டை