தங்கத்தேரில் வாவா

வேல்வேல் வேல்வேல் வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்


ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே
அரோகரா என்று சொல்லிப் பாடிவாரோமே
தேடி வந்தோர் வாழ்க்கையிலே நலங்கொடுத்திடும்
தண்டபாணித் தெய்வமே தங்கத்தேரில் வா வா

பார்புகழும் பழனிமலை ஆண்டவனே வா
பரங்குன்றப் பேரழகே வேலெடுத்து வா
சீர் மேவும் சரவணையில் தவழ்ந்தவனே வா
சிங்கார வேலவனே தங்கத்தேரில் வா வா!

வண்ணமயில் கொண்டவனே வா வா வா
வடிவழகே திருமுருகே ஓடோடி வா
எண்ணமெல்லாம் நிறைந்தவனே வா வா வா
எழில் நிலவே தங்கத்தேரில் ஏறிநீயும் வா வா!

பிரணவத்தின் பொருள் உரைத்துப் பெருமைகொண்டவா
திறமைமிகு சூரர்படை வென்று வந்தவா
அருணகிரி பாட்டினிலே அகமகிழ்ந்தவா
அன்பரெல்லாம் மகிழ்ந்திடவே தங்கத்தேரில் வா வா!

ஆறுமுகம் ஆகிவந்த வேலவனே வா
அன்பருள்ளம் கோயில் காணும் ஆனந்தனே வா
கூறும் வினை தீர்த்துவைக்க வேலெடுத்துவா
குன்றம் கண்ட தண்டபாணி தங்கத்தேரில் வா வா!

காவடிக்கு வழித்துணையாய் வேலைத்தந்த வா
கடம்பனோடு இடும்பனையும் காவல் தந்த வா
ஆடிவரும் காவடியைக் காணவேண்டாமா?
அழகுமுகம் காட்டி இங்கே சிரித்து மகிழ வா வா

ஆடிவரும் காவடிக்குள் சேர்ந்துவருபவன்
அழகுமுகம் காட்டி அங்கே சிரித்து நிற்பவன்
அருளாடி உருவினிலே காட்சி தருபவன்
அவரோடு தனிமையிலே பேசிப் பேசி மகிழ்பவன்!

குட்டையய்யா குடும் பத்திலே சொந்தம் கொண்டவன்
கும்பிட்டோர் நலம்காக்கப் பிரம் பெடுப்பவன்
பிரம் பெடுத்து ஆடுகின்ற பேரழகே வா
பெருமை சொன்னோம் தண்டபாணி தங்கத்தேரில் வா வா!

உன்னருளால் வாழ்வதிலே பெருமை கொள்கிறோம்
உன்வாசல் வருவதிலே சுகமும் காண்கிறோம்
எண்ணமெல்லாம் நிறைந்தவனே எழில் முருகே வா
வண்ணமயில் விட்டிறங்கித் தங்கத் தேரில் வா வா!

பழத்துக்காக சண்டைபோட்டுப் பழனிசென்ற வா
ஒளவைப் பாடலுக்கே பழமும் தந்து ஊதச் சொன்ன வா
அள்ளித்தரும் வள்ளலே என் செந்திலாண்டவா
ஆனந்தமாய் வேல் பிடித்துத் தங்கத் தேரில் வா வா!

உன்னழகைக் காண்பதற்கே ஓடி வருகிறோம்
உன்னருளைப் பெருவதற்கே தேடி வருகிறோம்
வண்ணமயில் ஏறிவரும் வடிவழகே வா
அன்னை தந்த வேலுடனே தங்கத் தேரில் வா வா!

அன்னையவள் மீனாட்சி வாழ்த்தி மகிழ்கிறாள்
அப்பன் மதுரைச் சொக்கேசன் பெருமை கொள்கிறார்
தேவர்மகள் தெய்வயானை மெல்ல சிரிக்கிறாள்
தினைப்புனத்து வள்ளி மயில் குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கிறாள்