தண்ணி மலையே!

அரோகரா

அலைகடலுக்கப்பாலே மலைநாட்டில் அமைந்திருக்கும்
அழகான தண்ணி மலையே!
அலைபாயும் மனத்திடையே சிலநேரம் துதித்தாலும்
அருள்வானே தண்ணி மலையே!
விலைபோட முடியாத மலையளவு வளங்கொண்ட
பினாங்கு நகர்த் தண்ணி மலையைத்
தலையாட மனமாடத் தமிழ்பாடித் துதிப்போர்க்குத்
தலையாய செல்வம் வருமே!
கலம் ஏறிப் பினாங்குநகர் கண்டார் தமையெல்லாம்
காப்பாற்றும் தண்ணி மலையே!
நலம்தந்து நிலம்தந்து அருள் தந்து பொருள் தந்து
பாலிப்பான் தண்ணி மலையே!
மலைநாட்டில் அமர்ந்தவனை மனவீட்டில் கண்டவர்க்கு
மயிலேறும் தண்ணி மலையான்
கலையாத பெருவாழ்வும் நிலையான சுகவாழ்வும்
கண்முன்னே கொண்டு தருவான்!


-கவிஞர் மா. கண்ணப்பன்