தண்ணீர் மலையான்

கந்தனுக்கு வேல் வேல் செந்தூர் வேலனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் செந்தூர் வேலனுக்கு வேல் வேல்


துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து
வெள்ளி விளையாடும் மலேயா சீமை தன்னையடைய
நாகபட்டினத்துக் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும்
செட்டிக் கப்பலுக்குத் துணையாம் செந்திலாண்டவனே

செந்தில் ஆண்டவனே! ஐயா! செந்தில் ஆண்டவனே!
செந்தில் ஆண்டவனே! ஐயா! செந்தில் ஆண்டவனே!


கப்பல் ஏறுகையில் முதலில் கடல் முகம் தெரியும்
கண்களில் நீரோடு நிற்கும் மனைவிமுகம் தெரியும்
அன்னைமுகம் தெரியும் அன்புப்பிள்ளைமுகம் தெரியும்
அந்தமுகங்களிடைச் செந்தூர் கந்தன் முகம் தெரியும்

செந்தில் வடிவேலா ஐயா செந்தில் வடிவேலா
வந்தவினை தீர்க்கும் எங்கள் செந்தில் வடிவேலா!


பினாங்குத் துறைமுகத்தைக் கப்பலும் பிடித்து விட்டதையா
கப்பல் அடியினிலே கூட்டம் கண்டிடவந்திருக்கு
தண்ணீர்ப் பூமலையில் நிற்கும் தண்ணீர்மலையானே; எங்கள்
பெண்டு பிள்ளைகளைக் காக்கும் பெரிய மலையானே

தண்ணீர் மலையானே நெஞ்சின் தாகம் தீர்ப்பானே
கண்களில் நீர்வழிய நாமும் கைகள் குவிப்போமே


தைப்பூச நாளினிலே அவனும் தங்கரதமேறி
நகரத்தைப் பார்க்கத் தேரில் நகர்ந்து வந்திடுவான்
பார்க்கு மிடமெல்லாம் தமிழர் பக்திமுகம் தெரியும்
காவடி ஆடிவரும் சீனர்காலடியும் தெரியும்

கந்தனுக்கு வேல்வேல்_செந்தூர் வேலனுக்குவேல் வேல்
கடலைத் தாண்டி எடுக்கும் எங்கள் காவடிக்கும் வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் கந்தன் காவடிக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் கந்தன் காவடிக்கு வேல் வேல்


-கவிஞர் மா. கண்ணப்பன்