நவரத்தின ஜோதி

சத்திய ஜோதி தெரியுதையா
நித்திய வாழ்வு மலருதையா
பழநி மலைதான் தெரியுதையா
பந்தபாச மெல்லாம் மறையுதையா


கார்த்திகை மதாம் விரதங்கொண்டேன்
காலையும் மாலையும் பூஜையிட்டேன்
தைத்திரு நாளில் மாலை அடைந்தேன்
தைப்பூசத்தில் எனை மறந்தேன்!

வேலின் துணையோடு செல்கையிலே
வேதனை எல்லாம் நீங்குதையா
காவடி கூடப் போகையிலே
கவலைகள் எல்லாம் மறையுதையா

ஓரடி ஈரடியாய் நடந்தேன்
ஓவ்வொருவூராய் கடந்து வந்தேன்
காவடிதாங்கி நடந்து வந்தேன்
திருவடிகாண தேடி வந்தேன்

மாமலை ஏறிப் போகையிலே
மனதில் இன்பம் தோன்றுதையா
உப்பாற்று பாலத்தை கடக்கையிலே
உள்ள(ம்) எல்லாம் மகிழுதையா

செந்தூரா உன் வடிவழகை
செந்தமிழில் நான் பாடிவந்தேன்
ஊஞ்சலில் நீயும் ஆடயிலே
உள்ளம் உன்வசம் ஆகுதையா

இடும்பன் குளத்தை தாண்டையிலே
பக்தியும் எல்லையைத் தாண்டுதையா
கார்த்திகை குழந்தையைப் பார்க்கையிலே
சிந்தையில் சொர்க்கம் தோன்றுதையா

அறனுடைய நெற்றியினில் உதித்தவனே
அருளையும் பொருளையும் அருள்பவனே
தங்க ரத்தில் வருபவனே
தந்தையும் தாயும் ஆனவனே!

தேவகோட்டை அரு.மெய்யப்பன்