பதினாறு பேர் செல்வம் தா தா

கந்தனே உன்னை நான் கனவிலும் மறவாத
காரணம் கண்டு கொண்டேன்
காத்திடும் தெய்வமே நீ யென்று உறுதியாய்க்
கண்டு தான் இங்கு வந்தேன்


வண்ணமயில் ஏறிடும் வள்ளி மணவாளனே
மாறாத அன்பு கொண்டேன்
மலை மீதில் வாழ்கின்ற எங்கள் குலதெய்வமே
வந்தெனக் கருள் செய்குவாய்

தந்தையும் தாயுமாய் உன்னையே எண்ணியே
தளராத பக்தி கொண்டேன்
தனயனைக் காத்திட உயர்வினைத் தந்திட
தாமதம் ஏன் சொல்லுவாய்

பன்னிரு கண்களால் பார்த்து நீ என்னிடம்
பாசாங்கு செய்யலாமா
பழனிமலை வாழ்கின்ற எங்கள் குலதெய்வமே
பக்தர்க் கருள் மெய்யனே

அருணகிரிப் பாட்டினை அகமகிழ்ந்தே கேட்டு நீ
அவனுக்கு அருள் புரிந்தாய்
ஆசையும் மோகமும் அணுகாமல் என்னையும்
ஆதரித்தருள் செய்குவாய்

மங்காத உள்ளமும் மாறாத கொள்கையும்
வாய்த்திட வேண்டி நின்றேன்
மலையாண்டியாகிய எங்கள் குலதெய்வமே
மனம்மகிழ வர வேண்டுமே

அன்றொன்றும் இன்றொன்றும் அனுதினம் பேசியே
ஆயுளைப் போக்கிடாமல்
அவனியில் மாந்தர்கள் நல்வாழ்வு பெற்றிட
ஆசியை நாடி வந்தேன்

பண்ணோடு இசைபாடும் நகரத்தார்கள் உனை
பாடாத நாளும் உண்டோ?
பரங்குன்றில் வாழ்கின்ற எங்கள் குல தெய்வமே
பதினாறு, பேர் செல்வம் தா.