பவனி வரும் பழநி வேலன்

அரோகரா அரோகரா ஆறுமுக சுவாமி
அரோகரா அரோகரா ஆறுமுக சுவாமி


தங்கத்தேர் பவனிவரும் பழநியிலே
தமிழ்மணம் தவழ்ந்து வரும் பழநியிலே
எங்கும் திருப்புகழ் மணக்கும் பழனியிலே
எப்பொழுதும் திருநாளாம் பழநியிலே (1)

காவடிகள் கோடிவரும் பழநியிலே
கனகமயில் ஆடிவரும் பழநியிலே
சேவலது கூவிநிற்கும் பழநியிலே
சித்தர் தவம் மேவி நிற்கும் பழநியிலே (2)

கற்பூர மணம் வீசும் பழநியிலே
கடல்போல் திருக்கூட்டம் பழநியிலே
அற்புதங்கள் அதிகமய்யா பழநியிலே
அன்பர் மனம் களிப்பதெல்லாம் பழநியிலே (3)

சிந்தையது சிலிர்க்குமம்மா பழநியிலே
செப்பரிய இன்பமம்மா பழநியிலே
கந்தனவன் ஆட்சியம்மா பழநியிலே
காணரிய காட்சியம்மா பழநியிலே (4)