மலரில் பிறந்து மலரில் வளர்ந்தவன்

மலரில் பிறந்து மலரில் வளர்ந்தவன் மன்னவன் முருகனடி
அவன் மலர்முகம் கண்ட திருநாளாக
மனமே உருகுதடி - என்
மனமே உருகுதடி.


கார்த்திகை மைந்தன் களித்து தவழ்ந்து
கமல மலரினிலே - தன்
மடியில் முருகன் தவழ்ந்ததினாலே
மலருக்கு பெருமையடி - தாமரை
மலருக்கு பெருமையடி. (மலரில்)

காந்தமாய் நம்மை கவர்ந்திடும் கண்கள்
கந்தன் மலர்களடி
நம்மை காக்கும் முருகன் கைகள் வாடா
கமலமலர்களடி - வாடா
கமலமலர்களடி. (மலரில்)

பன்னிரண் டாண்டுக்கு ஒருமுறை மலரும்
பாரில் குறிஞ்சிமலர்
அந்த பன்னிருகையன் முருகன் என்பதை
பகரும் அழகுமலர் - கைகள்
பகரும் அழகுமலர். (மலரில்)

பூத்தநல் மலரில் அழகிய மலர்போல்
புனிதன் அவன் சிரிப்பு - அந்த
புவனத்தை எல்லாம் இழுக்கும் அதுவே
அன்பின்வலை விரிப்பு - அதுவே
அன்பின்வலை விரிப்பு. (மலரில்)

பலமலரில் ஒன்றாய் மலர்ந்தது போல
பரமன் மகன் அழகு - அவன்
பாதமலரின் பக்த மலர்தனை
படைத்திட தினம் பழகு - நீ
படைத்திட தினம் பழகு. (மலரில்)