முருகையா

பாசி படர்ந்த மலை முருகையா
பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா
ஊசி படர்ந்த மலை முருகையா
உருத்திராக்ஷம் காய்க்கும் மலை முருகையா

மலைக்குள் மலை நடுவே முருகையா
மலையாள தேசமப்பா முருகையா
மலையாள தேசம் விட்டு முருகையா
மயிலேறி வருவாயிப்போ முருகையா

அந்த மலைக்குயர்ந்த மலை முருகையா
ஆகும் பழநி மலை முருகையா
எந்த மலையைக் கண்டு முருகையா
ஏறுவேன் சந்நிதி முன் முருகையா

ஏறாமல் மலை தனிலே முருகையா
ஏறி நின்று தத்தளிக்க முருகையா
பாராமல் கைகொடுப்பாய் முருகையா
பழநிமலை வேலவனே முருகையா

வேலெடுத்து கச்சை கட்டி முருகையா
விதவிதமாய் மயிலேறி முருகையா
கோலா கலத்துடனே முருகையா
குழந்தை வடிவேலவனே முருகையா

உச்சியில் சடையிருக்க முருகையா
உள்ளங்கை வேலிருக்க முருகையா
நெற்றியில் நீறிருக்க முருகையா
நித்தமய்யா சங்குநாதம் முருகையா

தேரப்பா தைப்பூசம் முருகையா
தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒரு புறமாம் முருகையா
இருபுறமும் காவடியாம் முருகையா

ஆற்காட்டு தேசத்திலே முருகையா
ஆறு லட்சம் காவடிகள் முருகையா
தென்னாட்டு சீமையிலே முருகையா
தேசமெங்கும் காவடிகள் முருகையா

கடம்ப வனங்கண்டு முருகையா
காட்சிதர வருவாயிப்போ முருகையா
பாவிநான் என்றுசொல்லி முருகையா
பாராம லிருக்கிறாயோ முருகையா

பழநி நான் வருகிறேனே முருகையா
பார்த்துவரம் தந்திடுவாய் முருகையா