பழநி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத்தேரினிலே

பழநி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத்தேரினிலே

மொட்டை போட்ட பக்தர் கூட்டம், திருப்புகழ் பாடும் அன்பர் கூட்டம்
தோளில் காவடி ஆடும் அழகு, தலையில் பால் குடம் போடும் நடனம்
உடலால் சுற்றும் அன்பர் கூட்டம், காணவேண்டியே இரதத்தில் ஏறியே !

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா என்றே பக்தர்கள் சேர்ந்தே சொல்ல
வா வா முருகா வடிவேல் அழகா, என்றே நாமும் சேர்ந்தே அழைக்க
கைகள் இரண்டும் சேர்த்துக் கும்பிட, காண வேண்டியே இரதத்தில் ஏறியே

புஷ்பக் காவடி பன்னீர் காவடி பறவைக் காவடி அக்கினிக் காவடி
மச்சக் காவடி மற்றய காவடி, சுற்றும் காவடி சழலும் காவடி
செட்டிக் காவடி சர்க்கரைக் காவடி , காண வேண்டியே இரதத்தில் ஏறியே

குடம் குடமாக பால்கள் சேர, பன்னீர் அங்கே மணக்க மணக்க
அரைத்த சந்தனம் வாசனை கூட, திருநீர் அங்கே சேர்ந்தே இருக்க
அனைத்தும் அவன்மேல்சொறிந்த பின்னரே,அருள வேண்டியே இரதத்தில் ஏறியே!

தேனும் நெய்யும் வாழைப் பழமும், கற்கண்டு சர்க்கரை பேரீச்சம் பழம்
போட்டே பிசைந்த பஞ்சா அமிர்தம், அண்டா நிறைய வழிய வழிய
அவனுக்குத் தரவே பக்தர்கள் ஏங்க, ருசிக்க வேண்டியே இரதத்தில் ஏறியே

செல்வங்கள் வேண்டி வரங்கள் கேட்க, நோய்கள் தீர வழியைக் கேட்க
குழ்ந்தை வேண்டி வரமும் கேட்க, நிம்மதி வேண்டி நெஞ்சம் கேட்க
எல்லாம் வேண்டும் என்றே கேட்க, கொடுக்க வேண்டியே இரதத்தில் ஏறியே !

அருணகிரியின் திருப்புகழ் ஒலிக்க கண்ணதாசனின் தமிழும் முழங்க
செட்டிக் கவிகள் செப்பிடும் மொழிகள் சேர்ந்தே நான்கு வேதமும் ஒலிக்க
காளை நானும் பாடல்கள் பாட, கேட்க வேண்டியே இரதத்தில் ஏறியே !


அருளிசை மணி - காளை சித. நாராயணன், கோட்டையூர்