ஸ்ரீ பழநியாண்டவர் திருப்பதிகம்


வேல் முருகா, வேல் முருகா, வேல்முருகா, வேல் வேல்
வேல் முருகா, வேல் முருகா, வேல்முருகா, வேல் வேல்


மோதகம் நிவேதனம்: முஷிகம் உன் வாகனம்:
முரங்கள் போல் செவித்தலம்: வரம் கொடுக்கும் ஐங்கரம்:
போதகம்: கஜானனம்: புராணஞான வாரணம்:
போற்றி போற்றி உன்பதம் காக்கவேண்டும் என்குலம்!

வேல்பிடித்த கையிலே, செங்கோல்பிடித்து நின்றவா!
வேண்டிவந்த யாவையும் விரைந்தளிக்கும் மன்னவா!
கால்பிடித்தேன்: என்மனக் கலக்கம் நான் உரைக்கவா?
கண்திறக்க வேண்டும் வேண்டும் தென்பழநி ஆண்டவா!

எனது பக்கம் நீயிருக்க எங்கிருந்து பகைவரும்!
நானிருந்த மனைநடுங்க எவ்விதம் துயர்வரும்?
மனது நொந்து நொந்து வந்த மைந்தனை நீ தாங்கவா
வாழிவாழி தென்பழநிக் கோவில் கொண்ட ஆண்டவா!

ஆதிநாளில் சூரனை அழித்ததெய்வம் நீயெனில்
அடுத்துவரும் பகையெலாம் முடித்ததுண்மை தான் எனில்
மோதி நிற்கும் என்பகை முடிக்கவேல் எடுத்துவா
முருகனே தென் பழநிகொண்ட அழகனே என் ஆண்டவா!

பன்னிரண்டு கைத்தலத்தில் பளபளக்கும் ஆயுதம்
பாய்ந்து செல்லத் துடிதுடிக்கும் பச்சைமயில் வாகனம்!
இன்னல் செய்யும் பகைமுடிக்க இன்னும் என்ன தாமதம்?
என்னையாளும் மன்னனான தென்பழநி ஆண்டவா!

ஈசனே உன் மனைவிபேரும் தேவசேனை என்கிறார்!
இன்னொருத்தி விழியிரண்டும் ஈட்டியென்று சொல்கிறார்!
வாசம் செய்யும் இடமெலாமுன் பாசறைகள் அல்லவா?
மைந்தனே என் பகைமுடிப்பாய் தென்பழநி ஆண்டவா!

எம்பிரானே ஒன்பதுபேர் தம்பிமாரை நம்பினேன்!
எனது காவல் இவர்கள் என்று கவிதை பாடிச் சொல்கிறேன்!
நம்பினாரைக் காக்கவேறு நாதன் ஏது சண்முகா?
நவிலொணாப் பகைமுடிப்பாய் தென்பழநி ஆண்டவா!

ஆறுபடை வீடிருக்க வேறுபடை ஏனடா?
அழிக்கொணாத கோட்டைநின் சடக்கரங்கள் தாமடா!
மாறிலாத கவசமாய் வரும் சுழன்று வேலடா!
வல்வினை பகைமுடிப்பாய் தென்பழநி ஆண்டவா!

ஆரவாரமாய் எழும் அகப்பகை: புறப்பகை
அறியொணாத மந்த்ரயந்த்ர தந்த்ரமாய் வரும் பகை:
வேர்விடும் குலப்பகை வினைப்பகை கிரகப்பகை
வேறுபல் பகை முடிப்பாய் வேள் பழநி ஆண்டவா!

எந்த வேளை யானபோதும் கந்தவேளைப் பாடுவேன்!
இந்த வேளை உன்னையன்றி எந்த ஆளைநாடுவேன்!
வந்தவேளை நல்ல வேளை வாகை கொண்ட வேலவா
வன்பகை ஒழித்தருள்வாய் தென்பழநி ஆண்டவா


- அருட்கவி கு.செ.இராமசாமி