வண்ண மயிலேறி வருக

வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல்


ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுக வேலா
அன்னைசிவ காமிபெற்ற சக்திஉமை பாலா
அன்புமயி லேறிநீயும் என்று வருவாயோ

பாடுமடி யார்மொழியில் பாசமிகு பாலா
பண்ணெடுத்து மாலையிட்டு பாடுகின்றோம் வாவா
பச்சைமயி லேறிநீயும் என்றுவரு வாயோ

மாடமனை மாநிதியும் வேண்டுவதும் இல்லை
மன்னவனே நீசிரித்தால் வாழ்விலேது தொல்லை
மாமயிலின் மீதிலேறி என்று வருவாயோ

மாறுபடு வாழ்வுஎன்னை மாற்றுவதேன் சீலா
மந்தமதி மாயைநீக்கும் மாப்பழநி வேலா
புள்ளிமயி லேறி நீயும் என்றுவரு வாயோ

மாமயிலின் மீதமர்ந்து மா நிலத்தைக் காக்க
மன்னவனே வந்தருள்வாய் தொல்லைகளைப் போக்க
வள்ளிதெய்வ யானையுடன் என்றுவரு வாயோ

வீரவேலை நீயெடுத்து வீசிவிளை யாடு
விண்ணவரைக் காத்தது போல் தூயஅன்பி னோடு
வண்ணமயி லேறிநீயும் என்றுவரு வாயோ