வேலுண்டு வினையில்லை


வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே


நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றிய
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் முருகன்

விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் முருகா

உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் முருகா

ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா

கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் கந்தனே

நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைத்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி முருகா

நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் முருகா

அறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே
ஆதா¢த்து எனை ஆளும் ஐயனே முருகா

திருப்புகழைப் பாடி உன்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் முருகா

கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் முருகா

வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே முருகா

மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உன்றன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் முருகா

தெள்ளு தினை மாவும் தேனும் பா¢ந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே முருகா

வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே முருகா

பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் முருகா