படியளக்கும் நாயகி - (மயிலை கற்பகாம்பாள்)

கற்பகமே! கற்பகமே! கற்கண்டுப் பெட்டகமே!
தெப்பமுடன் தேரோடும் சிவஞான சுந்தரமே!


கண்ணபிரான் சோதரியே! கபாலி காதலியே!
பண்ணளந்த கவிகளுக்குப் படியளக்கும் நாயகியே!

ஆடிவரும் வேளையிலே! அழகுமயில் போலாவாய்!
சாடிவரும் அசுரனுக்கோ சண்முகன்-கை வேலாவாய்!

அள்ளிவைத்த சாம்பலையும் ஆரணங்காய் நீ செய்வாய்!
புள்ளிவைத்தான் சம்பந்தன் புதுக்கோலம் நீதந்தாய்!

நீயிருக்கும் இடத்தினிலே நிம்மதிக்குப் பஞ்சமில்லை
போயிருக்கும் சபைகளிலே புகழ்வெற்றி கொஞ்சமில்லை!

அம்பிகையே! கற்பகமே! ஆதரிப்பாய்! ஆதரிப்பாய்!
செம்பொன்னும் நவமணியும் சேய்எனக்கு நீஅளிப்பாய்!