செந்திலாண்டவா

செந்தி லாண்டவா! திருச்செந்தூர் ஆண்டவா!
உந்தன் பெயரில் சிந்தைவைத்துச் சந்தம் பாடவா?
ஐயா சந்தம் பாடவா?


சின்னவயதில் அன்னை சொன்னாள் உன்னைத் தெரிந்தேன் நான்
தந்தையோடு செந்தூர்வந்து உன்னைக்கண்டேன் நான்
அன்று தொட்டு இன்று வரையில் உன்னை மறந்தேனா?
கந்தா நீயும் என்றுவந்து கருணை காட்டுவாய்?
ஐயா கருணை காட்டுவாய்!

எண்ணும் எழுத்தும் கற்கும்முன்னால் உன்னைக்கற்றேனே
அன்னை பெயரை அறியுமுன்பே உன்னை அறிந்தேனே
இன்றும்கூட உன்றன் கருணை இல்லையே முருகா!
என்றுவந்து என்னைக் காப்பாய் செந்தூர்வாழ் முருகா!
ஐயா செந்தூர்வாழ் முருகா!

காலைக் கண்ணைத் திறந்த உடனே கந்தா என்பேனே!
வேலை முடித்துத் துயிலும்போதும் வேலா என்பேனே
ஏழை என்னைக் காக்கநீயும் என்று வருவாயோ?
அந்த நாளை இன்றே தருவாய் செந்தூர் வாழ்முருகா!
ஐயா செந்தூர் வாழ் முருகா!

-மா. கண்ணப்பன்