பழனிமலை பாதயாத்திரை

வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்


ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறுங்க
ஓம் முருகன் மந்திரங்கள் வந்து பாடுங்க
கண்ணு ரெண்டைக் காக்கும் இமை போலக் காக்கிறான்
கந்தன் நம்மைக் கைவிடாமல் பாதுகாக்கிறான்

சேவல்மயில் வேலும் வந்தால் சிக்கல் தீருமே
செந்தமிழில் பாட்டுப் பாடச் சிரமம் போகுமே
ஆவலோடு பெண்ணும் ஆணும் ஆடிப் பாடுங்க
ஆறுபடை வீடுகளும் போய்ப் பாருங்க

பாதம் தேயப் பாதம் தேயப் பாதயாத்திரை
பழநி மலை முருகனுக்கு கோடி யாத்திரை
மாதம் தோறும் கார்த்திகையில் பஜனை செய்கிறோம்
மாசி மகப் பூசை ஐந்து நாள் சிறக்கிறோம்

கொண்டு வந்த்தென்ன இந்தக் குவலயத்திலே ?
கோடிப் பணம் சேர்ந்துமென்ன கும்பிடாமலே
பெண்டு பிள்ளை பேரன் பேத்தி வம்சம் எல்லாமே
பேணிக் காக்கும் முருகன் நாமம்பேச வாழுமே

பக்தியோடு பழநி மலைப் பாதயாத்திரை
பஜனையோடு விரதம் காத்தால் பழநி ஆண்டவன்
சக்தியெல்லாம் தந்திடுவான் சரணம் போடுங்க
சரவணணின் சடாட்சரத்தை நெஞ்சில் சாற்றுங்க

வேலை கேட்கும் பிள்ளைகட்கு வேலை தருகிறான்
விதவிதமாய் அனைவருக்கும் உதவி செய்கிறான்
மாலை கேட்கும் அனைவருக்கும் மணம் முடிக்கிறான்
மாமுருகன் பதம்பணிந்தால் மார்க்கம் காட்டுறான்

பிள்ளை இல்லாப் பேர்களுக்கு பிள்ளை தருகிறான்
பேச வாரா மக்களுக்கும் பேச்சுத் தருகிறான்
கொள்ளை இன்பம் தரும் முருகன் வியாதி தீர்க்கிறான்
குடும்பம் எல்லாம் வாழ்வதற்கு அருள் சுரக்கிறான்

காசி ஸ்ரீ அரு. சோமசுந்தரன்