உள்ளமதில் நலங்கூட

அரோகரா

உள்ளமதில் நலங்கூட ஓங்குபுகழ் வளங்கூட
வெள்ளமெனப் பொருள்கூட வெற்றியது கைகூட
உள்ளுருகி யாம்முதலாய் உன்னடியிற் தெண்டனிட்டோம்
வெள்ளெருக்கு விநாயகனே வேண்டுநலந் தாருமையா
காதிரெண்டும் முறம்போல கண்ணிரண்டுங் கடுகுமணி
ஊதிவைத்த பெருவயிறு உன்னுருவம் யானை ஐயா
ஏதிடரும் வாராமல் எந்நாளுங் காப்பவனே
ஆதிசிவன் பாலகனே அருள்பொழியுங் கணபதியே
அப்பமுண்டு பொரிகடலை அவலுமுண்டு சீனியுண்டு
முப்பழமும் தேனுடனே மோதகத்துப் படையலுண்டு
தப்பாமல் எடுத்தமுறை சரியாக்கித் தருபவனே
எப்போதும் எமக்கருள எழுந்துவருங் கணபதியே.

மீயன்னா சேவுகன்செட்டி