கந்தனுக்கு நன்றி மாலை !

கந்தனுக்கு நன்றிசொல்ல வார்த்தையுமில்லை - சிங்கை
கந்தனருள் பெறுவதுதான் வாழ்க்கையின் எல்லை - முருகா !

மேன்மைமிகு மானிடப் பிறவியும் தந்தாய்
மேலான பெற்றோர்கள் உயிரெனக் கொடுத்தாய்
உற்றதுணை உடன்பிறந்தோர் சேர்த்தும் வைத்து
உத்தமனே யாம்வளர உறவுகள் கொடுத்தாய் - முருகா ! [கந்தனுக்கு]

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் அறிய வைத்தாயே
விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் புரிய வைத்தாயே
ஆற்றல்பல அளித்தாலும் போதா தென்று
ஓவியமே நற்குணங்கள் பற்பல தந்தாய் - முருகா ! [கந்தனுக்கு]

வலுவான வாழ்க்கைத்துணை வரமும் கொடுத்தாய்
அழகான பிள்ளைவரம் அன்புடன் கொடுத்தாய்
நல்லோரை நண்பராக நன்றே கொடுத்து
நல்லவனே யாம்மகிழ உறவுகள் வளர்த்தாய் - முருகா ! [கந்தனுக்கு]

நல்லபடி −வ்வாழ்வக்கை −னிதே தொடர
நாயகனே உந்தனருள் என்றும் வேண்டும்
திருப்பணிகள் தொண்டுகள் பற்பல செய்ய
திருமகனே சிவன்மகனே அருளிக் காப்பாய் - முருகா ! [கந்தனுக்கு]

கள்ளமற்ற எண்ணங்கள் உள்ளம் கொண்டு
கபடமற்ற வார்த்தைகள் நாவில் ஏற்றி
பண்பான நற்செயல்கள் அனுதினம் செய்ய
பகவானே பரம்பொருளே பலமே அருள்வாய் - முருகா ! [கந்தனுக்கு]

சிங்கையிலே வீற்றிருக்கும் அழகு வேலனே
சிந்தையிலே கொலுவிறுக்கும் எங்கள் பாலனே
உள்ளமெல்லாம் உவகைபொங்கி உன்னைப் போற்றிட
உயர்ந்தோனே அருட்கடலே வரமே அருள்வாய் - முருகா ! [கந்தனுக்கு]

இளை.சரவணன், 28-01-2009.