சிங்கை முருகன் வருகை

பவனி வருகிறார் சுவாமி பவனி வருகிறார்
தங்கரதம் மீதமர்ந்து பவனி வருகிறார்.


ஆனைமுகன் தம்பியவர் பவனிவருகிறார்
அகிலத்தை காத்தருள பவனிவருகிறார்
அம்பிகை பாலன் அவன் பவனிவருகிறார்
அடியவரை காத்திடவே பவனிவருகிறார்.

தைப்பூச நாளினிலே பவனிவருகிறார்
தரணியை வாழவைக்க பவனிவருகிறார்
காவடிகள் ஆடிவர பவனிவருகிறார்
கவலைகளைப் போக்கிடவே பவனிவருகிறார்.

தேவர்க்கு தேவன் அவன் பவனி வருகிறார்
தேடிவரும் பக்தர்குறை தீர்க்க வருகிறார்
ஆடிவரும் காவடிக்குள் ஆழ்ந்து வருகிறார்
அடிபணிந்து நிற்போரை வாழ்த்த வருகிறார்.

சூழுகின்ற துன்பம்யாவும் துரத்த வருகிறார்
சூரர் படை வேர் அறுக்க சுற்றி வருகிறார்
வேலுருவாய் நின்று நம்மை காக்க வருகிறார்
வேண்டுவரம் கொடுப்பதற்கு விரைந்து வருகிறார்.

கடல் கடந்து வந்தோரை காக்க வருகிறார்
காலம் முழுதும் வழிநடத்த ஓடிவருகிறார்
வடிவேலன் முருகன் இங்கு வந்து நிற்கிறார்
வளம்தந்து காத்திடவே பவனி வருகிறார்.

சிங்கை நகர் முழுவதையும் சுற்றி வருகிறார்
சிங்காரக் காவடியில் ஆடிவருகிறார்
தண்டபாணித் தெய்வமின்று தேரில் வருகிறார்
தெண்டனிட்டோர் அன்பை மெச்சி காக்க வருகிறார்.

தங்கமயில் வாகனத்தில் தவழ்ந்து வருகிறார்
தந்தினத்தோம் தாளம்கேட்டு தாவி வருகிறார்
அழகான காவடியில் ஆடி வருகிறார்
ஆனந்தமாய் பால்குடத்தில் அமர்ந்து வருகிறார்.

பாடிவரும் பக்தரைக் கண் பார்க்க வருகின்றார்
பார்புகழும் வாழ்க்கை தர பறந்து வருகின்றார்
அவனியெல்லாம் அவன்புகழை நாம்பாடவே.
அளவில்லா வரங்களெலாம் அளித்து நிற்கின்றான்.

லெ. சக்திகுமார்