சரணம் முருகையா

சரணம் முருகையா சாமி சரணம் முருகையா
சரணம் முருகையா சாமி சரணம் முருகையா

தில்லை நாயகன் விழிப் பிள்ளையானவன்
வல்ல வேலவன் மிக நல்ல காவலன்
வள்ளி நாயகன் நமை வாழ்த்தும் தாயவன்
வள்ளல் ஆனவன் வரம் வாரித் தருபவன்

ஆதி யானவன் அருட் சோதி யானவன்
வேத மானவன் குற மாது மோகனன்
தீது தடுப்பவன் நலஞ் செய்து கொடுப்பவன்
நீதி யானவன் மிக் நேர்மையானவன்

விதியு மானவன் அதன் விளைவு மானவன்
புதிரு மானவன் ஐம் புலனும் மானவன்
மதியு மானவன் ரவிக் கதிரு மானவன்
கதியு மானவன் பெருங் கடவுள் ஆனவன்

ஊனு மானவன் என் உயிரு மானவன்
உள்ளம் ஆனவன் எழும் உணர்வு மானவன்
நாவும் ஆனவன் சொல் நயமும் ஆனவன்
நாசி யானவன் என் சுவாச மானவன்

கந்த வேலவன் அருள் சிந்தும் பாலகன்
சொந்த மானவன் என் சுற்ற மானவன்
பந்த மானவன் மிகப் பாச மானவன்
விந்தை யானவன் வெகு விவர மானவன்

தாயு மானவன் என் தந்தை யானவன்
சேயு மானவன் குலச் செல்வ மானவன்
அண்ண னானவன் தரும் ஆசி யானவன்
தன்மை யானவன் ஒரு தம்பி யானவன்

மனைவி யானவன் மிக இன்ப மானவன்
உண்மை யானவன் வெகு உரிமை யானவன்
வண்ண வேலவன் என் வழக்கி லாடுவான்
எண்ணம் போலவே ஜெயம் பண்ணி ஆளுவான்

செந்தில் ஆண்டவன் செந்தீயில் மூண்டவன்
எந்த வேளையும் சுகம் தந்தே ஆள்பவன்
செட்டி சேவுகன் தமிழ் கொட்டும் பாவிலே
தொட்டில் ஆடியே சுகம் தந்து ஆள்பவன்

திருவையாறு மீ. சேவுகன் செட்டி