எத்தனை அலங்காரம்

எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு
எத்தனை அலங்காரம்
சக்தியின் பிள்ளை சரவண முத்துக்கு
எத்தனை அலங்காரம்


சித்தம் போற்றும் சிவனார் பிள்ளைக்கு
எத்தனை அலங்காரம்
குழந்தை அலங்காரம் கோடிப் புன்னகை
கூடும் அலங்காரம்

மழலை அலங்காரம் மங்கையர் தாலாட்டி
மகிழும் அலங்காரம்
சிறுவன் அலங்காரம் சிவனுக்கு மந்திரம்
செப்பும் அலங்காரம்

குமரன் அலங்காரம் கோதையர் இருவர்
கொஞ்சும் அலங்காரம்
வேலன் அலங்காரம் வேல் கொண்டு சூரனை
வீழ்த்தும் அலங்காரம்

வேடன் அலங்காரம் வேல்விழி வள்ளியை
விரும்பும் அலங்காரம்
விருத்தன் அலங்காரம் வினாயகர் துணையின்
வெற்றி அலங்காரம்

அரசன் அலங்காரம் அனைத்துச் செல்வமும்
அளிக்கும் அலங்காரம்
ஆண்டி அலங்காரம் ஆசையை நீக்கிய
அழகு அலங்காரம்

சந்தன அலங்காரம் சகலப் புகழையும்
தந்திடும் அலங்காரம்
திருநீறு அலங்காரம் தீவினை போக்கிடும்
திவ்விய அலங்காரம்

மலர்கள் அலங்காரம் மங்களம் தருகின்ற
மகிழ்ச்சி அலங்காரம்
திருமண அலங்காரம் தேவியர் இருவர்
திருப்பூட்டும் அலங்காரம்

நண்பர்கள் அனைவரும் நடத்தும் பஜனையில்
எத்தனை அலங்காரம்
நாடும் வீடும் போற்றும் நல்ல
கந்தர் அலங்காரம்

-குறள் இலக்குவன், காரைக்குடி