குங்குமத்தில் நீ குளித்து குவலயத்தை ஆள்கிறாய்

சக்தி சக்தி எனில் சஞ்சலங்கள் நீங்குமாம்
சக்தி சக்தி எனில் நெஞ்சில் இன்பம் பொங்குமாம்


குங்குமத்தில் நீ குளித்து குவலயத்தை ஆள்கிறாய்
சந்தனத்தில் அலங்கரித்தால் சாந்தமுடன் பார்க்கிறாய்
பாலும் தேனும் கொண்டுவந்து குடம்குடமாய் தருகிறோம்
பாசத்துடன் அரவணைத்து பாடவைப்பாய் அன்னையே

மலர்கள்தூவி உன்னைப்போற்றி மனமுருகி வேண்டினோம்
மண்ணில் புற்று உள்ளஇடம் தேடிப்பாலை ஊற்றினோம்
கண்களிலே நீர்வழிய காலமெல்லாம் பாடினோம்
கருணை கொஞ்சம் காட்டி நீயும் கைகொடுப்பாய் அன்னையே

தேடிவரும் ஆடியிலே கூழும் வைத்து படைக்கிறோம்
ஆடிவரும் தேரிழுத்து திருவிழாவை முடிக்கிறோம்
ஓடிவந்து உன்னடத்தில் குறைகள் எல்லாம் சொல்கிறோம்
நாடிவரும் எங்களையும் காத்தருள்வாய் அன்னையே

பால்குடங்கள் எடுத்துவந்துன் பாதங்களில் சேர்க்கிறோம்
சுடும்நெருப்பில் நடந்துவந்து உன்னை நாங்கள் பார்க்கிறோம்
பன்னீரும் இளநீரும் தினம்தினமும் தருகிறோம்
பாசத்துடன் அரவணைத்து பாடவைப்பாய் அன்னையே

எலுமிச்சம்பழம் கோர்த்து மாலை உனக்கு தருகிறோம்
பாதிப்பழம் திருப்பி நாங்கள் நெய்விளக்கும் வைக்கிறோம்
வேப்பிலையும் கட்டிவைத்து விருப்பமுடன் அழைக்கிறோம்
வேறு கதி இல்லை இல்லை ஆதரிப்பாய் அன்னையே

சூலத்தையே கைப்பிடித்து பகையழிக்க ஓடிவா
உடுக்கையிலே ஒலியெழுப்பி உலகையாள ஆடிவா
எந்த திசை நோக்கினாலும் நீ இருப்பதுண்மையே
இங்கு எங்கள் பாடல் கேட்டு அருள்புரிவாய் அன்னையே