செந்தூரில் வாழும் முருகா!

அரோகரா

வண்டாடும் குழல்மாதர் கண்டாடும் மயில்மீதில்
வந்தாளு கின்ற குமரா!
வங்காளக் கடல்மீதில் தன்காவல் முறைகாக்கும்
சிங்கார வடிவே லவா!
பண்டாரம் எனவாகிப் பழனியில் மலைஏறிப்
பாலிக்க வந்த முருகா!
பண்பாளும் நிலைகூடிப் பல்லாண்டு நினைவாகி
பணி செய்தோம் பழனி வேலா
தண்டாயு தம்கொண்டு தன்னேரில் அருளார்வம்
தந்தாளும் கார்த்தி கேயா!
தந்தான தனதான சந்தங்கள் தமிழோசை
தந்தாள ஓடி வா வா!
செண்டாடு மாதிருவர் சீராடிக் கலைகூட்டச்
செந்தூரில் வாழும் முருகா
சிரித்தாலும் சினந்தாலும் சேர்ந்தாலும் பிரிந்தாலும்
செம்மையாய்க் காக்க வா வா!

-கவிஞர் அரு. நாகப்பன், உ.சிறுவயல்.