வேலவா ஷண்முகா

வேலவா ஷண்முகா வேல்முருகா வா வா,
வேலவா ஷண்முகா வேல்முருகா வா வா,
வேல்முருகா வா வா, வேல் முருகா வா வா.


வள்ளி மணவாளனே, குன்றக்குடி வேலோனே
குலம் விளங்க வந்தவா, குழந்தை வரம் தந்தவா
தொட்டில் கட்டி வந்தோரின் துயர் துடைத்த ஷண்முகா.

மேருமலைவாசன் மகளை மணமுடித்த மாயனே,
பரங்குன்றமலை பரமனே, மாலை எடுத்துத் தந்தவனே
தேவசேனாபதியே உந்தன் பாதம் பணிந்து வாழ்ந்தோமே

சூரவதம் செய்தவா, ஆழிக்கரைச் செந்தூரா
வீரம்புகட்ட வந்தவா, பகைமுடித்துத் தந்தவா
வேல் வணங்கிச் சென்றவர்க்கு ஜெயமளித்த வேலவா

ப்ரணவம் உணர்த்த உதித்தவா, ஞானமளித்த பாலகா
ஐம்புலனில் வாழ்ந்தவா, தரணி ஆழச் செய்தவா
அகந்தை நீக்கி அறிவு தந்தாய் சுவாமிமலை நாயகா

தணிகைமலை சுப்பையா, சாந்தரூபம் கொண்டாயா
மனம் அடக்க வந்தவா, அமைதி நெஞ்சில் தந்தவா
தவித்துத் தவித்துக் கலங்கினோர்க்குக் கலங்கரையாம் தணிகேசா

குறுஞ்சி நிலக்கிழவனாம் அழகுச் சோலை நடுவிலே
நக்கீரர்பாட லயித்தவா, ஆற்றுப்படையில் குளிர்ந்தவா
தமிழ்வளர்த்த செட்டிமக்களை ரட்சித்தருள ஓடிவா

இத்தனையும் தந்தாயே, குறைவில்லாமல் காத்தாயே
நன்றிசொல்ல வாரோமையா, (உனை) பார்க்க மனம் ஏங்குதையா
காவடி ஆடி வாரோமையா, சர்க்கரை அதில் கொண்டோமையா
பழனிமலை ஆண்டவா ஏறெடுத்துப் பாராயோ
பழனிமலை ஆண்டவா தரிசனம்தான் தாராயோ